கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக நேற்று அந்த மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் கள்ளக்குறிச்சியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை - கன்னியாகுமரி தொழில் தடம் எனும் புதியத் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக பகலவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர், “கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிமாவட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதிகாரிகளின் புலன் விசாரணை தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணம் என்பது துரதிஷ்டவசமானது. கலவரத்தில் ஈடுபட்ட உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த யாராக இருந்தாலும் சமூகவலைதளங்களில் வீடியோ மற்றும் காவல்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடரும்.
கலவரம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளது. சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு மாவட்ட காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இது இதுகுறித்து மாவட்டக் காவல்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் பள்ளிகளிலும், பெற்றோர்களிடமும் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை ஒழிக்க தனிப்படை அமைத்து முற்றிலும் ஒழிக்கப்படும்” என்று தெரிவித்தார்.