கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு வீதியில் சுவாமி சகஜானந்தா சமூக பேரவை சார்பில் சகஜானந்தா அகடாமி பெயரில் அரசுத் தேர்வுகளில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சமூகத்தில் உள்ள 52 ஏழை மாணவ, மாணவிகள் தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதில் 13 பேர் ஆண்கள், 39 பேர் பெண்கள் அடங்குவர்.
வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாட்கள் நடைபெறும் இந்த வகுப்புக்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டங்களைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். வகுப்பில் கலந்துக் கொள்ளும் சில மாணவர்கள் வரும் போதே மதிய உணவு எடுத்து வருகிறார்கள். சிலர் ஏழ்மையின் காரணமாக உணவு எடுத்துவராதவர்களுக்கு மதிய உணவும் தயார் செய்து கொடுக்கிறார்கள். மேலும் மாணவர்களுக்கு இரு வேளையும் டீ, வடை வழங்கப்படுகிறது.
இவர்களின் ஒரே நோக்கம் ஏழை மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்துவிட்டு இருந்திடாத வகையில், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், அவர்களின் சொந்த பணிகளை நீக்கிவிட்டு வாரத்தின் இரு நாட்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இது பொதுமக்கள் மற்றும் ஏழை மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.