Skip to main content

“புதிய உச்சத்தை தொட்டிருக்கிறோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

CM MK Stalin says We have reached a new peak.

சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை உருவாக்குவது குறித்த மாநாடு இன்று (28.03.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்த மதிப்புக் கூட்டலில், தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது.

இந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்திட ஒரு உயரிய இலக்கு நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல: எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டிருக்கிறோம். இதனால்தான், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து விளங்குகிறது. தமிழ்நாடு, நகர்ப்புற மக்கள்தொகை அதிகம் கொண்ட மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் மட்டுமல்ல. மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலம். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை கொண்டுவர எடுத்து வரும் முயற்சிகள் பலன் அளித்து வருகிறது. கோயம்புத்தூர், திருச்சி, ஒசூர், மதுரை, சேலம், தூத்துக்குடி போன்ற நகரங்களும் பொருளாதார சக்திகளாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் மொத்த  மினனணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 விழுக்காட்டோடு தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதுவும் கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறோம்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்