Skip to main content

மியான்மரில் நிலநடுக்கம்; 100 பேர் உயிரிழப்பு?

Published on 28/03/2025 | Edited on 28/03/2025

 

Earthquake in Myanmar 100 person lost his life

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலின் படி மியான்மரின் மாண்டலே நகரில் 20 பேரும், டாங்கூ நகரில் 5 பேரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதோடு ஏராளமான கட்டடங்கள், மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் அடுத்தடுத்த ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய துயரச் சம்பவஙளுக்கு மத்தியில் தாய்லாந்து தலைநகர் பாங்காங் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 30 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

புதியதாகக் கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தில் இருந்த 43 தொழிலாளர்களின் நிலை என்ன? என்பது பற்றிய விவரம் ஏதும் அரியப்படாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு ஏராளமான வழிப்பாட்டுத் தலங்கள் இடிந்து விழுந்துள்ளன. மீட்புப் பணி குறித்து விவாதிக்கத் தாய்லாந்து பிரதமர் சினா வர்த்ரா அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதே சமயம் பாங்காங்கில் அவசர நிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் தடுப்புத்துறை அறிவித்துள்ளது. வியட்நாம், மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்