
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நிலைகுலைந்த இந்த சோழ மண், நிமிர்ந்து நிற்கும் பெரிய கோவில் போல மீண்டும் மகத்தான எழுச்சியை பெறும்.! என தனது முக நூல் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கின்றார் தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார்.
அதிலிருந்து., " நவம்பர் 15 முன்னிரவு பொழுதிலிருந்து, கஜா புயலின் நேரடி சாட்சியமாய் இருக்கிறேன். புயல் கோரத்தாண்டவம் ஆடிய பின்னிரவு பொழுதில் வாகனத்தை இயக்க முடியாமல் சாலையில் இருந்தபடி அந்த இயற்கையின் உக்கிர காட்சியை கண்டேன். விடிந்த பிறகுதான் தெரிந்தது ஒரு தலைமுறையே மிகப் பெரிய பேரழிவுக்கு ஆளாகி விட்டதென்று.! தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் மதுக்கூர் ,திருவோணம், ஒரத்தநாடு, ஆம்பலாப்பட்டு.. போன்ற பகுதிகள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது.

நவம்பர் 16 காலையில் துவங்கிய மீட்புப்பணி இன்றுவரை அரசின் அனைத்து துறைகளின் மிக சிறப்பான செயல்பாட்டால் தொய்வின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு நடைபெற்று வருகிறது. அனைத்துத் துறை பணியாளர்களும் ஊண் உறக்கமின்றி கடுமையாக உழைத்து வருகின்றனர், அரசு நிர்வாகத்தோடு ,தன்னார்வ அமைப்பினரும், மாணவர்களும், இளைஞர்களும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர். பட்டுக்கோட்டை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது . இந்த மக்களின் கடின உழைப்பு நெஞ்சு நிமிர் தஞ்சை என்பதற்கிணங்க மீண்டும் சகலத்தையும் தங்கள் உழைப்பால் கட்டமைப்பு செய்வார்கள்.
நிமிர்ந்து நிற்கும் பெரிய கோவில் போல இந்த சோழ மண் மீண்டும் மகத்தான எழுச்சியை பெறும்!!" என்கின்றது அந்தப் பதிவு.