சென்னையில் அனைவருக்கும் இலவச பேருந்து சேவையை அரசு கொண்டுவர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''சென்னையை பொறுத்தவரை சாலையில் 75 விழுக்காடு இடத்தை காரில் செல்பவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் காரில் 25 சதவீத மக்கள் தான் செல்கிறார்கள். ஆனால் 25 சதவீதம் தான் சாலைகளை பேருந்துகள் ஆக்கிரமிக்கிறது. ஆனால் அந்த பேருந்துகளில் 75% மக்கள் பயணிக்கிறார்கள். இதை குறைக்க வேண்டும். அதற்கு இலவசமாக பேருந்து சேவை வழங்க வேண்டும்.
என்னுடைய அறிவுரை, சென்னையில் பேருந்தை இலவசமாக கொடுத்து விடுங்கள். இங்கு 3500 பேருந்துகள் தான் இருக்கிறது. இதை 8,000 என்ற எண்ணிக்கையாக அதிகரிக்க வேண்டும். பேருந்துகளை நல்ல தரமான பேருந்துகளாக கொடுங்கள். யாரும் காரில், பைக்கில் போகமாட்டார்கள். சென்னையில் பேருந்தில் எங்கு சென்றாலும் இலவசம் என்றால் காற்று மாசு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், சுற்றுலாத்துறை வருமானம் அதிகாரிக்கும்.
இதுபோன்ற கொள்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கோடியே இரண்டு லட்சம் பேர் சென்னையில் இருக்கிறார்கள். அப்போது சென்னையில் இதைக் கொண்டு வந்து விட்டு அடுத்தபடியாக மற்ற இடங்களில் கொண்டு வர வேண்டும். சென்னையில் மட்டும் காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் ஆறு வருடத்திற்கு முன்பு வந்த புள்ளி விவரம் இன்று அதிகமாக இருக்கும். இதுபோன்ற இலவச பேருந்து கொள்கைகளை அரசு கொண்டு வர வேண்டும்'' என்றார்.