கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உளுந்து பயிர் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதனால் விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு உளுந்து வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஒரு மூட்டை உளுந்தின் விலை ரூபாய் 4900 முதல் 5000 வரை என்று நிர்வாகம் விலை நிர்ணயத்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நேற்றைய தினத்தை விட 400 ரூபாய் குறைந்தற்கான காரணத்தை கேட்ட போது அதிகாரிகள் எவ்வித பதிலும் சொல்லவில்லை. அதையடுத்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட அதிகாரிகள், இன்றைய விலை இவ்வளவு தான் என்றும், இந்த விலை கட்டுப்படியாக ஆகவில்லை என்றால் மூட்டைகளை எடுத்து செல்லுங்கள் என்று அலட்சியமாக கூறியதால் விவசாயிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் ஒரு சாக்கிற்கு 10 ரூபாயும், எடை போடுவதற்கு 10 ரூபாயும் கொள்ளையடிப்பதாகவும், வெளியூர் வியாபாரிகளை கொள்முதல் செய்ய விடாமல், கமிஷன் தொகைக்காக உள்ளூர் வியாபாரிகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் அனுமதிப்பதால் விவசாயிகள் அனைத்து வகையிலும் நஷ்டம் அடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைகளுக்கு உடன்படாத விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட நிலையத்தின் கதவுகளை இழுத்து மூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. பின்னர் காவல் துறையினர் சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர். இதேபோல் நெல் மூட்டை விலை குறைப்பால் விவசாயிகள் கடந்த வாரம் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.