Skip to main content

சிம்பு பட வசனத்தைச் சொல்லி செய்தியாளர்களை கலகலப்பாகிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Former minister Jayakumar excited the media by quoting the Simbu movie script!

 

பொது வெளியில் கலவரம் தூண்டும் விதமாக ஒருவரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். அவரை அ.தி.மு.க. வினர் முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.

 

கையெழுத்திட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தி.மு.க அரசு அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வருகின்றது. பொய் வழக்குப் போட்டு அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று நினைத்தால் பூனை பகல் கனவு கண்டது போல் தான். ஒரு போதும் அது பலிக்காது. அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பது சாத்தியமில்லாதது.

 

அ.தி.மு.க.விற்கு ஒற்றைத் தலைமை இல்லாததால் தான் பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறும் கருத்து தவறான கருத்து. 1996ல் அ.தி.மு.க.விற்கு அசைக்க முடியாத தலைமை இருந்தது. அப்பொழுதும் தி.மு.க அரசு பொய் வழக்குப் போட்டது. அ.தி.மு.க.வை தற்போது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் சிறப்பாக வழிநடத்துகிறார்கள். இப்போதும் பொய் வழக்குப் போடுகிறார்கள், அ.தி.மு.க தலைமைக்கும் பொய் வழக்கு போடுவதற்கும் சம்மந்தமில்லை.

 

கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது தான். 2021ஆம் ஆண்டு தேர்தலில் 3 சதவீத வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் 2024 பாராளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சிறப்பான வெற்றியை பெறும். கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ஓபிஎஸ் சகோதரர் ராஜாவும் கூட அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டு இருக்கிறார்” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, “திங்கள், புதன், வெள்ளி ரிப்பீட்டு.. திங்கள், புதன், வெள்ளி ரிப்பீட்டு” என பதில் அளித்தார். ஜெயக்குமார் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் இரண்டு வாரம் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த முறை கையெழுத்திட வரும் போது பதில் அளிக்கிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.

 

ஜெயக்குமார் காவல் நிலையத்திலிருந்து காரில் புறப்படும் போது சசிகலா ஆதரவாளர் ஒருவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னமா வாழ்க என முழக்கமிட்டார். அவரை காவல் துறையினர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்