Skip to main content

தப்பியோடிய கரோனா நோயாளி காவல்துறையிடம் சிக்கினார்!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


விழுப்புரம் மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களைக் காவல்துறையும், மருத்துவக் குழுவினரும் தேடிச்சென்று, அவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தனிப்பிரிவில் அனுமதித்தனர். அவர்களுக்கு நோய்த் தோற்று ஏதும் இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்நிலையில், கடந்த 7- ஆம் தேதியன்று 26 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகக் கூறி 26 நபர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களை 28 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

மறுநாள் அந்த 26 நபர்களின் மருத்துவ அறிக்கையில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த 4 பேர் வீட்டிற்கும்  மருத்துவக் குழுவினரும், காவல்துறையினரும் விரைந்து சென்றனர். அப்போது கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மூன்று பேர் அவரவர் வீட்டில் இருந்ததை அடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. நான்கு பேரில் டெல்லியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் மட்டும் காணாமல் போனார்.
 

 

coronavirus youth villuppuram police arrested admit hospital


இவர் வேலை தேடி புதுச்சேரிக்கு வந்து பிறகு தனது சொந்த ஊரான டெல்லி திரும்பிச் செல்ல முடியாமல் விழுப்புரத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர் இவருக்கு மருத்துவர்கள் கரோனா பாதிப்பில்லை என்று கூறி  டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். 

நமக்குத்தான் நோய்த்தொற்று இல்லையே இனிமேல் எப்படியாவது, நமது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த இளைஞர் சென்னையை நோக்கிச் சென்றுள்ளார். சென்னை சென்று அங்கிருந்து சரக்கு லாரிகள் மூலம் எப்படியாவது டெல்லிக்குச் சென்று விடுவது என்ற நோக்கத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார்.
 

http://onelink.to/nknapp


இவரைக் காணாமல், காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் திகைத்தனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக 7 தனிப்படை அமைத்து காணாமல் போன இளைஞரைத் தேடச் சொன்னார். அதுமட்டுமில்லாமல் ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இளைஞரின் படத்தைப் போட்டு போஸ்டர் அடித்து விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும்  போஸ்டர் ஒட்ட உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (14/04/2020) மாலை 04.30 மணியளவில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதிக்கு செல்போன் மூலம் ஒரு தகவல் கிடைத்தது. அதில் கரோனா பாதிப்பு உள்ள இளைஞர் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சரக்கு லாரிகளின் டிரைவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க, உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற விழுப்புரம் காவல்துறையினர் தகவல் கொடுத்த வரை மடக்கிப் பிடித்தனர். 

அவரிடம் விசாரித்தபோது, கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் படம் போட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை பார்த்த வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் போஸ்டரில் உள்ளது போன்ற உருவம் உள்ள டிரைவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில் தங்கியிருப்பதை அழைத்துச் சென்று அடையாளம் காட்டியுள்ளார். உடனே போலீசார் அந்த இளைஞரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். 

மேலும் அவருடன் நான்கு லாரி டிரைவர்களும் உடன் இருந்துள்ளனர். அவர்களைச் செங்கல்பட்டு காவல்துறை மூலம் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. அங்கிருந்து விழுப்புரம் போலீசார் ஷர்மாவை மிகுந்த பாதுகாப்புடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். 
 

அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது தனக்கு நோய் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதும் மிகுந்த நிம்மதியோடு இனிமேல் நாம் எப்படியாவது நம்ம ஊருக்குச் சென்று சேர வேண்டும் என்று முடிவு எடுத்து நடந்து சென்றதாக  கூறியுள்ளார். 

இளைஞர் இருப்பதைக் கண்டுபிடித்து கூறிய லாரி டிரைவர் பூதப்பாண்டிக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்கி அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். ஒரு வார காலமாக கரோனா நோயாளியைத் தேடிவந்த விழுப்புரம் போலீசாருக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரத்திலிருந்து பாடாளம் வரை சென்ற அந்த இளைஞர் மூலம் மற்றவர்கள் யாருக்கேனும் கரோனா பரவியிருக்கலாம் என்று அச்சத்தில் உள்ளனர் தேசிய நெடுஞ்சாலையோர பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்