கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த, நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களது பணி நேரம் என்பது கரூர் மாநகராட்சியில் காலை 6.00 மணி முதல் மதியம் 2 மணி வரையும், நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 6.00 மணி முதல் 11 மணி வரையும் மீண்டும் மதியம் 2:00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், ஊராட்சிகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி மற்றும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி என உள்ளது.
தற்போது கோடை வெப்பம் கடந்த காலங்களை விட மிக அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீச்சு காரணமாக, 110 டிகிரி முதல் 115 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதைப்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலை மே மாதம் 15 வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வெப்ப அலை காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு, உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் மதியம் 12.00 மணியிலிருந்து மதியம் 3.00 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே கடும் வெப்ப அலை வீசும் நேரத்தில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்வதில் இருந்து விலக்கு அளிக்க ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தலைவர் சுப்பிரமணி கரூர் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.