விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மருத்துவ கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கரோனா தடுப்பு பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளிலும் செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளிலும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பாதிப்பு கூடுதலாக ஏற்ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 820 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உப கரணவசதிகள் தேவையான அளவு உள்ளன. நோயாளிகளை மூன்று விதமாக பிரித்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணிக்கு கூடுதலாக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் நோயாளிகளை முழுமையாக கவனித்து இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்திருந்தாலும் அங்கு 12 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இறப்புகளை தடுக்க இந்திய மருத்துவமுறையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் 12 பெண்களுக்கு மகப்பேறு மருத்துவமும் 34 பேருக்கு அறுவை சிகிச்சை பிரசவமும் செய்துள்ளனர். இப்படி சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
பணியின்போது இறந்த டாக்டர்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பணிபுரிந்து உயிரிழந்தவர்களை கணக்கெடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை படிப்படியாக அனைவருக்கும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு கரோனா காரணமாக ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் டெலிபோன் மூலம் அவ்வப்போது 2000 பேருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இதுவரை 25,000 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார்.