தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி முடிவுகளை அறிவிக்கக்கூடாது. சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு பல கட்ட தேர்தல் நடந்தாலும் ஒரே நாளில் தான் முடிவு அறிவிக்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 30- ஆம் தேதி விசாரிக்கிறது. ஏற்கனவே வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எம்.பி தாக்கல் செய்த மனுவும் டிசம்பர் 30- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.