திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காந்தி சாலை, பஜார் வீதியில் புதிய வசந்த் அண்ட் கோ அருகே, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும், பச்சை நிற பெட்சீட்டில் சுற்றப்பட்ட நிலையில் தலை சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அருகே துண்டாக்கப்பட்ட கைகளும் இருந்தன. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பஜார் சாலை வழியே வந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், சோழவரத்தை அடுத்த பெருங்காவூர் சுடுகாட்டில் அஜித்குமார் என்பவரின் சமாதியில், பாதி துண்டான நிலையில், தலை ஒன்று இருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த நபர், மீஞ்சூரையடுத்த வஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் - உஷா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின் என்கின்ற அஸ்வின் குமார் என்பதும், அவன் மீது காவல்துறையில் சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
அஸ்வின் தம்பி சஞ்சய்குமாரிடம் போலீசார் விசாரித்தபோது, "கடந்த 27ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் அஸ்வின், அவனின் நண்பனான அஜய்யுடன் பைக்கில் சென்றான். பின்னர் இரவு போன் செய்த அஜய், என் அண்ணனை சிலர் கொலை செய்ய இருப்பதாகவும், நீ வீட்டைவிட்டு தப்பிஓடிவிடு என்றும் கூறினான். அதை என்னுடைய உறவினர் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தேன்'' எனக் கூறினான். இந்நிலையில், போலீசார் இந்தக் கொலையில் தொடர்புடைய அவ்ஜா என்ற அஜித்குமார், ஜெயக்குமார், மோகன், கார்த்திக் என்கின்ற ஜெய்பீம், தேவராஜ் என்கின்ற தேவா, மனோ என்கின்ற கருப்பு ஆகியோரை கைதுசெய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக ரெட்ஹில்ஸ் காவல் உதவி ஆணையரான ராஜாராபர்ட்டிடம் கேட்டபோது, "அவ்ஜா என்ற அஜித்குமாரின் உறவினர் பெண்ணான அபி என்கின்ற அபிநயாவை இரண்டு வருடங்களாக அஸ்வின் காதலித்து ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டிருக்கிறான். இதனால், தன் உறவினர் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த அஸ்வினை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அஜித்குமார் கொலை செய்திருக்கிறான்'' என்று தெரிவித்தார். அவ்ஜா என்கிற அஜித்குமார் சரித்திரப்பதிவு குற்றவாளி எனவும், அவன் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கை போலீசார் திசைதிருப்புகிறார்கள் என்று அஸ்வினுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். நக்கீரன் நடத்திய புலனாய்வில் இந்தக் கொலைப் பின்னணியில் கஞ்சா விற்பனை, ரவுடிகளில் யார் பெரியவன் என்ற போட்டி இருப்பது தெரியவந்தது. கடந்த வருடம், செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி, செங்குன்றத்தை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரு கும்பலுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக கண்ணம்பாளையம் அரசு உடற்பயிற்சிக் கூடத்தில் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி ரவுடியான கருப்பு அஜித் என்பவன் தனது கூட்டாளிகளுடன், பெருங்காவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை வெட்டிச் சாய்த்தார். அதில் இருவரது சடலம் எரிக்கப்பட்டது, அதில் அஜித்குமார் என்பவரின் சடலம் மட்டும் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலுள்ள கருப்பு அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெத்தாக போஸ்ட் போட்டிருந்தான். அதில் அந்த மூன்று பேர் கொலையைப் பற்றி, கானா பாடலில் கெத்தாகப் பாடியிருந்தான். இதனால் கொலை செய்யப்பட்டவர்களின் கூட்டாளியான அவ்ஜா என்கின்ற அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அஸ்வினை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்துவிட்டு, தலையை எடுத்துவந்து அஜித்குமாரின் சமாதியில் போட்டுவிட்டு, வெட்டப்பட்ட கைகளுடன் அஸ்வின் உடலை மீஞ்சூர் பஜார் சாலையில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து உள்ளூர் வாசிகள் கூறும் போது, கஞ்சா விற்பனையைத் தடுக்கமுடியாத போலீஸ், காதல் விவகாரம் காரணமென கதை கட்டிவருகிறது எனக் கூறுகின்றனர். கஞ்சா போதையால் இப்பகுதியில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.