நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா கடந்த மார்ச் 22 ஆம் தேதி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ''ராஜபுத் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பர்சோத்தம் ரூபாலா மன்னிப்பு கோரியிருந்தார்.ஆனால் அவரது மன்னிப்பை அந்த சமுதாய மக்கள் ஏற்க மறுத்தனர்.
இந்நிலையில் ராஜ்புத் சமுதாய மக்களிடம் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனாலும் ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம், அரியானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் பாஜக கட்சிக்கு இந்தச் சர்ச்சை காரணமாக பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் தற்போது மீண்டும் மன்னிப்பு கோரி இருக்கிறார். மேலும் பல்வேறு பாஜக தலைவர்களும் தவறாக இப்படி பேசி விட்டதற்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.