![The forest department is making a serious effort to catch the wild elephant!](http://image.nakkheeran.in/cdn/farfuture/p4AeY4zohE-Vu0oWZkbUT33Zsb-Qzfv8UV_p1gtjti4/1608117779/sites/default/files/inline-images/DF45675474.jpg)
ஒரே வாரத்தில் மூன்று பேரை கொன்ற காட்டுயானையைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த ஒரே வாரத்தில் 3 பேர் காட்டுயானை ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் தந்தையும் மகனும் அந்தக் குறிப்பிட்ட யானையால் கொல்லப்பட்ட நிலையில், அந்த யானையைப் பிடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் காட்டுயானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்று காலை நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் உள்ள புதர் ஒன்றில் அந்த யானை இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். ஆனால், அந்த யானையுடன் 12 யானைகள் இருந்ததால் அந்தக் குறிப்பிட்ட ஒரு யானைக்கு மட்டும் மயக்க ஊசி செலுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் தொடர் முயற்சியால் முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதேபோல் இரண்டாம் முறை மயக்க ஊசி செலுத்தவும், பல்வேறு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஊசியைச் செலுத்தியுள்ளனர்.
யானை மறைந்துள்ள பகுதி சமதளப் பகுதியாக இல்லாமல் மேடு பள்ளங்கள் நிறைந்த புதர்ப் பகுதியாக இருப்பதால் யானை மயக்கமடைந்தாலும், அதனை வாகனத்தில் ஏற்றுவது மிகவும் சவாலான காரியம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். அதனால் யானை முழுமையாக மயக்கமடைவதற்கு முன், அதனைச் சமதளப் பகுதிக்குக் கொண்டுவரும் முயற்சியில் வனத்துறை இறங்கியுள்ளது. யானையை வண்டியில் ஏற்ற கும்கி யானையும் கொண்டுவரப்பட்டுள்ளது.