விழுப்புரம் மாவட்டம், 'ஆரோவில்' காவல்நிலையப் பகுதி புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ளது. ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் நேற்று கோட்டக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வெளிநாட்டு வாலிபர் சென்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த நிஜிம்புறா இம்மானுவேல் என்பவரது மகன் புலோவிஸ் முன்ஜிரோ (வயது 32) என்பதும், இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தனது நாட்டிலிருந்து விசா பெற்று இங்கு வந்து தங்கிப் படித்துவந்ததும் தெரியவந்தது.
படிப்பு முடிந்தபிறகு தனது சொந்த நாட்டிற்குச் செல்லாமல் ஆரோவில் அருகில் உள்ள கோட்டக்கரை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரது படிப்புக்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட விசா காலம் 2017-ஆம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. விசாவை மேலும் புதுப்பிக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசின் அனுமதி இல்லாமல் தங்கியிருந்துள்ளார். இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம் என்கிறார்கள் காவல்துறையினர். இதையடுத்து ஆரோவில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறகு, அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.