தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.