தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.
தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.
இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.