
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது சுமார் 8 அடி நீளமும், 5 அடி அகலமும் 800 கிலோ எடையும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியுள்ளது.

உடனே அந்த கடல் பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வனவர் சிவசங்கர் கீழத்தோட்டத்திற்கு விரைந்து சென்று கடல்பசு, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். இது போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை பிடிப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படியான குற்றம் என மீனவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் மீன் வலையில் கடல் பசுவை மீண்டும் ஆழ்கடலுக்கு கொண்டு போய் பாதுகாப்பாக கடல் பசுவை விட்டனர். மீனவர் வலையில் சிக்கித் தவித்த கடல்பசு மீண்டும் கடலுக்குள் விட்ட போது ஆனந்தமாய் நீந்திச் சென்றது.

கடல்பசுவை உயிருடன் கடலுக்குள் விட்ட மீனவர்களையும், மீனவ பெண்களையும் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் சந்தன மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் வலையில் சிக்கியிருந்த நிலையில் கடல்பசு வலையில் சிக்கிய தகவலை வனத்துறைக்கு சொன்ன மீனவர்களுக்கு விரைவில் வனத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தி மீனவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் எனவும், ரொக்கப்பரிசு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.