தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இ.ஆ.ப., இன்று (14/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கைகளில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய தொகுதி- 1 பணிகளுக்கான மொத்த காலிப் பணியிடங்களில் எண்ணிக்கை 66 ஆகும். முதன்மைத் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,800 ஆகும். முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.