இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் மீது சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட், நிதி நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவர் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை வட்டி என ரூ.525 கோடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுப்பது தொடர்பாக ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.
இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று (13.08.2024) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் யாதவர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
மேலும் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு புதுக்கோட்டை வழியாகத் திருச்சி செல்வதை அறிந்த போலீசார் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் உதவியுடன் காரைக்குடி - திருச்சி பைபாஸ் சாலையில் கட்டியாவயல் அருகே சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த தேவநாதன் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர் வந்த 2 கார்களையும் நிறுத்தி சோதனை செய்ததுடன் தேவநாதன் யாதவை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றுள்ளனர்.