பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 3 கோடி ரூபாய் பண மோசடியில் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரை, ரூ.3 கோடி மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக, காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, ஜூலை 24-ஆம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல்ராஜாவுக்கு இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து, கரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும், அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என ஞானவேல் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த மோசடியில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் கூட தன்னுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், 3 கோடி ரூபாய் மோசடியை ரூ. 300 கோடி என காவல்துறை தவறாக குறிப்பிடுவதாக, ஞானவேல் ராஜா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை தரப்பில், நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே ஞானவேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், ஞானவேல் ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த மோசடி வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகத் தவறினால், ஞானவேல்ராஜா மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.