![female village assistant who was caught stealing Rs 5000 bribe was arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/SSNNmWcvPJQW2wh-7moA8vBmRrZ6jvnK-nMDxNVVuqI/1685431656/sites/default/files/inline-images/1001_7.jpg)
கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார்(49). இவரது மனைவி சுதா. செல்வகுமாருக்குச் சொந்தமாக பாதிரிக்குப்பத்தில் வீட்டுமனை உள்ளது. இந்த வீட்டுமனை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். மேலும் பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் மாரியம்மாள்(44), கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சர்வேயர் பஞ்சநாதன்(50) ஆகியோரை சந்தித்து தனது வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு சர்வேயர் பஞ்சநாதன், கிராம உதவியாளர் மாரியம்மாள் ஆகியோர் தங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா தருவோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவி ரூபாய் 5 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் செல்வகுமார் பாதிரிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்த மாரியம்மாளிடம் ரூபாய் 5000 பணம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் மாரியம்மாளை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் அங்கிருந்த சர்வேயர் பஞ்சநாதனையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஞ்சநாதனையும், மாரியம்மாளையும் கைது செய்தனர். மேலும் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
5000 லஞ்சம் வாங்கிய வழக்கில் சர்வேயர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.