கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பா.ஜ.க. ஆட்சியின் எட்டாண்டு சாதனை விளக்கப் பேரணியைத் தலைமை தாங்கி நடத்தி வரும் பா.ஜ.க. இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா, விருதுநகர் மாவட்டம் – சாத்தூருக்கு வந்தபோது, பா.ஜ.க. கட்சிக் கொடியைத் தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், பாரத மாதாகி ஜே என்று கோஷமிட்டு அக்கட்சியினர் சமாளித்தனர்.
விருதுநகரில் ரமேஷ் சிவா பேட்டியளித்தபோது -
“சென்னையை நோக்கிப் பயணிக்கிற இந்த 800 கிமீ பேரணிக்கு அனுமதி வாங்குறதுக்காக 10 நாட்களா அலைஞ்சுகிட்டிருந்தோம். ஆனா, டிஜிபி இழுத்தடிச்சி, கடைசில பெர்மிஷன் கொடுக்காம, லெட்டரை மட்டும் வாங்கிட்டு, நீங்க ஒவ்வொரு மாவட்டமா போங்க. அங்க பெர்மிஷன் கொடுப்பாங்கன்னு சொல்லிட்டாரு. கன்னியாகுமரி வந்தா அங்கே தடை, திருநெல்வேலில தடை, விருதுநகர்லயும் தடை. எல்லா மாவட்டத்துலயும் என்ன சொல்றாங்கன்னா, இது பயங்கரமான கலவர பூமி. அவ்ளோ சாதிக் கலவரம் இருக்கு. மதக்கலவரம் இருக்குன்னு சொல்லுறாங்க. அது என்னன்னு தெரியல. திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் இருக்கும்போல.
இந்த திமுக ஆட்சில ரெண்டு பைக்கை எடுத்துட்டு வந்தாலே பிடிச்சிடறாங்க. பைக் ராலின்னா ஜாதிக் கலவரம் வரும்னு சொல்லுறாங்க. அப்ப திமுக தலைவர்களுக்கே தெரியுது. நம்ம ஆட்சி காலத்துல எதுவுமே நடத்த முடியாதுன்னு, கலவரமா நடந்துக்கிட்டு இருக்குன்னு. பைக்ல போனா பிடிக்கிறாங்க. ஆனா, நடுரோட்டுல வெட்டுறவன ஒன்னும் பண்ணுறது இல்ல. கிட்டத்தட்ட ரெண்டு வாரத்துக்கு 10 கொலை நடக்கு. பாலியல் வன்கொடுமை நடக்கு. அதுக்கு அரெஸ்ட் பண்ணுறதா செய்தி எதுவும் வர்றது இல்ல. ஆனா, நாங்க 10 பைக் எடுத்தால், உடனே அங்கே தடைங்கிறாங்க. எங்களுக்கு இது பெருமையான விஷயம்.
கன்னியாகுமரில இருந்து இங்க வர்ற வரைக்கும் பாதுகாப்புங்கிற பேர்ல திரும்புன பக்கமெல்லாம் போலீஸ். ஒரு லெஃப்ட் திரும்புனா, இன்னொரு லெஃப்ட் சாப்பிட உட்கார்ந்தா, அட, பக்கத்து டேபிள்ல வந்து போலீஸ் உட்கார்ந்துக்கிறாங்க. இந்த அளவுக்கு பயப்படறாங்கன்னா, அதுக்கு உண்மையான காரணம், அண்ணாமலை அண்ணன்தான். அவரைப் பார்த்து பயப்படறாங்க. பொதுக்கூட்டம்னு பா.ஜ.க. அறிவிச்சா, திடீர்ன்னு அறுபது, எழுபதாயிரம் பேர் நிக்கிறாங்க. இதைப் பார்க்கிற திமுக தலைவர்களுக்கு பயமாத்தானே இருக்கும். இதையும் தாண்டி நாங்க, மத்திய அரசாங்கம், என்னென்ன திட்டங்களை எடுத்துட்டு வந்திருக்காங்கன்னு விளக்கிட்டு இருக்கோம்.
கன்னியாகுமரில இருந்து வந்துக்கிட்டிருக்கிற எங்களுக்கே ஆச்சரியமா இருக்கு. மோடி எவ்வளவு நல்லாட்சி கொடுத்துட்டு இருக்காருன்னு. மத்திய அரசாங்கம் எடுத்துட்டு வந்த திட்டத்துல இங்கே யாரு பேர் வாங்குறாங்கன்னா.. ஸ்டாலின். அவங்களே முந்திக்கிட்டு எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்டுறாங்க. ஸ்டாலினால நல்லாட்சி கொடுக்க முடியாது. மக்களுக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சிருச்சு. அதனால, 2026-ல கண்டிப்பா அண்ணாமலை அண்ணன் முதல்வரா உட்காருவார். கண்டிப்பா பிஜேபிதான் ஆட்சியைப் பிடிக்கும். இதையெல்லாம் நாங்க மக்கள்ட்ட விளக்கிச் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றார்.
நம்பிக்கை என்னும் அச்சாணியில்தான் பலரது அரசியல் பயணம் சுழல்கிறது!