திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், (03-04-2019) கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:
’’அன்பார்ந்த பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, இளைய சமுதாயத்தின் எனதருமை இளைஞர்களே, வணக்கத்திற்குரிய வாக்காளர் பெருமக்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம்.
வருகின்ற 18ஆம் தேதி, நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது, மத்தியில் மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச ஆட்சியை நாம் அகற்றிட வேண்டும் என்ற உணர்வோடு, நடைபெறக்கூடிய தேர்தல். அந்தத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் நடராஜன் அவர்கள் உங்கள் இடத்தில் நிறுத்தப்பட்டு இருக்கின்றார் என்று நான் சொல்வதை விட ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றார் என்று சொல்கின்றேன். அவரை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் முன்னால், உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல் நடைபெறக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். அவர் இல்லாமல் சந்திக்கின்ற முதல் தேர்தல் இந்த தேர்தல். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால், இந்த நேரம் அவர்தான் இந்த மேடையில் உரையாற்றிக் கொண்டிருப்பார். அவர் உரையாற்றுகின்ற நேரத்தில், ஒவ்வொருவராக விழித்துச் சொல்லிவிட்டு கடைசியில் உங்களை அழைக்கின்ற நேரத்தில் கரகர குரலில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று உங்களை அன்போடு அழைப்பார். அப்படி அழைக்கின்ற உடன்பிறப்புகளின், உங்களில் ஒருவனாக தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக நான் உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும், அனைத்துத் தேர்தலிலும் தோல்வி என்பதை அடையாமல் வெற்றி – வெற்றி - வெற்றி என்று இருந்தவர் தலைவர் கலைஞர் .
தலைவர் கலைஞர் சார்பில் இன்றைக்கு அதரவு கேட்க வந்திருக்கின்றேன். அப்படி ஆதரவு கேட்க வந்திருக்கின்ற நேரத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பதற்கு முன்பு தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டு காலமாக மக்களின் பிரச்னைகளுக்குப் போராடி, மக்களுக்கான பல பணிகளை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். அதைத்தொடர்ந்து தேர்தல் களம் காண கூட்டணி அமைத்தோம். அதைத் தொடர்ந்து, எண்ணிக்கையின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் யார்? யார்? ஒவ்வொரு கட்சியும் அறிவித்து விட்ட பின்னர், கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் எல்லோரும், ஒரேமேடையில் பேசக்கூடிய வாய்ப்பை இந்த கோவை மாநகரம் பெற்றிருக்கின்றது.
அனைவரும் கோவையில் நடைபெறக்கூடிய இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அமர்ந்து இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, இந்த அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றீர்களே உங்கள் அனைவரின் சார்பில் நன்றி சொல்லுகின்ற அதேநேரத்தில், அனைவரையும் வருக வருக என்று வரவேற்க விரும்புகிறேன்.
இந்தக் கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்காக சேர்ந்து இருக்கின்றோம் என்று நீங்
கள் கருத வேண்டிய அவசியம் இல்லை. கொள்கைக்காக சேர்ந்திருக்கக்கூடியவர்கள் தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள். அரசியல் இலாபங்களுக்காக சேர்ந்தவர்கள் அல்ல, தத்துவங்களுக்காக சேர்ந்திருக்கக் கூடியவர்கள் இங்கு மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள். நாம் இன்று நேற்று அல்ல சில பல ஆண்டுகாலமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்தியில் நடைபெறக்கூடிய ஆட்சியையும், மாநிலத்தில் நடைபெறக்கூடிய ஆட்சியையும், வன்மையாக கண்டித்து எத்தனையோ போராட்டக் களங்கள் அமைத்து, பல போராட்டங்களை நாம் நடத்திக்காட்டி இருக்கின்றோம். நம்முடைய சேர்க்கை என்பது, எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல எண்ணங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அணிதான் மேடையில் அமர்ந்திருக்கின்றது. அதனால்தான் நான் தெளிவோடு சொல்லுகின்றேன் - உறுதியோடு சொல்லுகின்றேன் - இது கொள்கைக்காக அமைந்த கூட்டணி.
அதேநேரத்தில் நமக்கு எதிராக அமைந்திருக்கக்கூடிய கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல, கொள்ளைக்கார கூட்டணி. நேற்று வரை ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவர்கள். தங்களுடைய இலாபங்களுக்காக அவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கின்றார்கள். நேற்றுவரை ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சித்து கொண்டிருந்தவர்கள். தேர்தலுக்காக ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, அவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய பேரங்கள், உருட்டல்கள், மிரட்டல்கள், சதிகள், அனைத்தையும் நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். தேர்தலுக்கு முன்னால் சேர்ந்தவர்கள், தேர்தலுக்குப் பின்னால் பிரிவார்கள். ஏனென்றால், கொள்ளைக் கூட்டத்தில் எப்பொழுதும் அப்படித்தான் நடக்கும். அதுதான் விரைவில் அந்த அணியை பொறுத்தவரை நடக்கப்போகின்றது.
கடந்த 15 நாட்களாக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பாதி தமிழ்நாட்டை சுற்றி வந்திருக்கின்றேன். கடந்த 20ஆம் தேதி, தலைவர் கலைஞரை ஈன்றெடுத்த திருவாரூரில் என்னுடைய பயணத்தை தொடங்கினேன். துவங்கிய நேரத்தில் மக்களிடத்தில் கண்ட எழுச்சியை, உணர்ச்சியை தொடர்ந்து எல்லா நாடாளுமன்ற தொகுதிகளிலும், நான் சென்ற இடங்களில், அதிலும் குறிப்பாகவும், சிறப்பாகவும் கோவையில் கூடி இருக்கக்கூடிய உங்களின் முகத்திலும் நான் காண்கின்றேன்.
இன்றைக்கு கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் அதே நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றது. "நாடும் நமதே நாற்பதும் நமதே" என்ற அந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் இந்தப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே, நான் இங்கு திரண்டு இருக்கக்கூடிய உங்களிடம் இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நின்று கொண்டிருக்கின்ற நடராஜன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். அவருக்கு நீங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். தேடித் தருவீர்களா? நிச்சயமாக, உறுதியாக, நன்றி.
புதுவையையும் சேர்த்து 40க்கு 40 என்ற தொகுதிகளில் நாம் வெற்றிபெறப் போகின்றோம். அதேபோல் தமிழகத்தில் நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலில் 18க்கு 18 என்ற வெற்றியை பெறப் போகின்றோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது. நியாயமாக 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தியிருக்க வேண்டும், ஆனால், தேர்தல் கமிசன் நடத்த முன்வரவில்லை. அப்படி நடத்தாமல் இருப்பதற்குப் பின்னணி உண்டு. நான் அந்த விஷயத்திற்கு செல்ல விரும்பவில்லை. வெளியில் என்ன செய்தி சொல்லப்பட்டது.
3 தொகுதிகளைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. ஆனால், தடை கிடையாது, ஸ்டே கிடையாது ஏன் நடத்த முன் வரவில்லை. அண்மையில் சூளூர் தொகுதி ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்திருக்கிறார். அதோடு சேர்த்து 22 தொகுதிகளில் நடத்தினால், 22 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று விட்டால் மெஜாரிட்டியாக திராவிட முன்னேற்றக் கழகம் முன் வந்து விடுகின்றது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க தானாக ஆட்சியிலிருந்து கவிழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடும். இவற்றை திட்டமிட்டு ஒரு சூட்சமத்தை தேர்தல் கமிஷனை பயன்படுத்தி இன்றைக்கு இந்த ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய கழகப் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் இல்லத்தில், அவரது மகன் நடத்தக்கூடிய கல்லூரியில், வருமானவரித்துறை ரெய்டு நடந்துள்ளது. ஒருநாள் முழுவதும் சோதனை நடத்தியிருக்கின்றார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு வருமானவரித் துறையினர், ரெய்டு செய்திருக்கின்றார்கள். எதுவும், கிடைக்கவில்லை? ஒரு நாள் முழுவதும், தேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்பாளர் கதிர் ஆனந்த் வெளியில் செல்லவில்லை.
அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து மீண்டும் வந்து பணத்தை எடுத்து இருக்கின்றார்கள். எங்கிருந்து எடுத்தீர்கள்? துரைமுருகன் இல்லத்திலா? அவர்கள் நடத்தக்கூடிய கல்லூரியிலா? எங்கிருந்து எடுத்தீர்கள்? அதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய சதி என்னவென்றால் அந்தத் தொகுதியில் நடைபெற இருக்கக்கூடிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல், ஆம்பூர், குடியாத்தம். எனவே, அதை நிறுத்துகின்ற போது இதையும் நிறுத்திவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் கேட்கின்றேன், தேர்தல் கமிஷனிடத்தில் கேட்கின்றார்கள், துரைமுருகன் இல்லத்திற்குச் சென்று ரெய்டு நடத்தினீர்கள் எப்படி? என்ன காரணம்? முறையாக தாக்கீது அனுப்பினீர்களா? முறையான அடிப்படையில் நடந்ததா? என்று கேட்டோம், என்ன சொன்னார்கள் என்றால், காவல்துறையினரிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் செய்தோம் என்றார்கள். யார் புகார் கொடுத்தாலும் ரெய்டு செய்து விடுவீர்களா? நான் சொல்கின்றேன் இந்த மேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். மோடியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கின்றது, போய் பறிமுதல் செய்ய முடியுமா? அங்கு சென்று நீங்கள் ரெய்டு செய்ய முடியுமா? முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி வீட்டில் இருக்கின்றது, துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பி.எஸ் அவர்கள் தேனியில் வேட்பாளராக நிற்கக்கூடிய தன்னுடைய மகனுக்காக ஆயிரம் இரண்டாயிரம் என்று வினியோகித்து கொண்டிருக்கின்றார்கள். ஆதாரமாக புகைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அங்கே ஏன் செல்லவில்லை? ஏதோ புகார் கொடுத்தார்களாம் ரெய்டு நடத்தினோம் என்று ஒரு விளக்கத்தை சொல்கிறார்கள் என்று சொன்னால் தயவுகூர்ந்து இதை நீங்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
ஏன் அண்மையில், சபேசன் என்கின்ற ஒரு பெரிய ஒப்பந்ததாரர், இந்த ஊர் மந்திரி வேலுமணிக்கு மிக மிக வேண்டியவர். எந்தப் பணிகளாக இருந்தாலும் அவருக்குத்தான், உள்ளாட்சித் துறைகளில் இருக்கக்கூடிய பணிகள் மட்டுமல்ல இந்த மாவட்டத்தை பொருத்த வரையில், கொங்கு மண்டலத்தை பொறுத்த வரையில் எந்த அரசுப் பணியாக இருந்தாலும் அந்த ஒப்பந்ததாரருக்கு தான்.
அவருடைய வீட்டில் ரெய்டு நடந்தது. ஏறக்குறைய 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இருக்கின்றார்கள். இது யாருடைய பணம்? நான் சொல்லுகின்றேன். வேலுமணி தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் என்று நான் சொல்லுகின்றேன். இங்கு இருக்கக்கூடிய தேர்தல் கமிஷன், இங்கு இருக்கக்கூடிய காவல்துறை, இங்கு இருக்கக்கூடிய ஐ.டி நடவடிக்கை எடுக்கத் தயாரா?
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறப் போகின்றது. அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிற்கக்கூடியவர்கள் தோற்பது மட்டுமல்ல டெபாசிட் இழக்க போகின்றார்கள் என்ற செய்தி உளவுத் துறையின் மூலமாக மோடிக்கு சென்றடைந்து விட்டது. அதுதான் உண்மை, அதனால் திசை திருப்புவதற்காக, ஏதேனும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நிலையில் தான் இன்றைக்கு இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்களே தவிர நிச்சயமாக சொல்கின்றேன், உறுதியாக சொல்கிறேன், நீங்கள் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது - மலராது - மலராது.
மோடியை Go Back Modi மோடி என்று சொன்ன முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதன்பிறகு தான் மற்ற மாநிலங்களில் அது பரவியது, நேற்றைய தினம் பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவராக இருக்கக்கூடிய அமித்ஷா அவர்கள், சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கின்றார். என்ன பேசுகின்றார் என்று கேட்பதற்காக நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஏறக்குறைய 200 பேர் அல்லது 300 பேர் இருக்கும். பயங்கர கூட்டம். மேடையிலும் அதிகக் கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசி முடித்து விட்டு, அங்கு திரண்டிருந்த மக்கள் 200 பேரிடம். “உங்கள் ஓட்டு யாருக்கு தாமரைக்கு தானே” என்று கேட்டு இருக்கின்றார். ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அவர்கள்தான் பதில் சொல்லவில்லை மேடையில் இருந்தவர்களாவது பதில் சொன்னார்களா? அவர்களும் சொல்லவில்லை. அதை நான் கூர்ந்து கவனித்தேன். எனவே இந்த நிலை தான், இதை முதலில் பி.ஜே.பி புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். இப்பொழுது வளர்ச்சியைப் பற்றி அவர்கள் பேசுவதே கிடையாது.
வேலைவாய்ப்பை பற்றி இங்கு சொன்னார்கள், வேலை வாய்ப்பு தருகின்றோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இப்பொழுது அந்த வேலை வாய்ப்பை பற்றி பேசுகின்றார்களா? விவசாயிகளுக்கு இரட்டை இலாபம் நாங்கள் உருவாக்கித் தருவோம் என்று உறுதிமொழி கொடுத்தார்களே? விவசாயிகளின் லாபம் பற்றி இப்பொழுது யாராவது வாய்திறந்து பேசுகின்றார்களா?
கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் கருப்பு பணத்தை மீட்டு எடுத்து விட்டார்களா? நம்முடைய மோடி அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், T என்கின்ற ஆங்கில எழுத்து. அந்த T-யை வைத்து ஒரு ஐந்து கொள்கையை வெளியிட்டார். T என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் Tயை விற்றுத் தான் பிரதமர் அளவுக்கு உயர்ந்தார் என்று அவரே பெருமையோடு சொல்வார். நான் அதை கேவலப்படுத்துகின்றேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவர் சொன்னதைத்தான் சொல்கின்றேன். எனவே T-யை வைத்து ஒரு ஐந்து செய்தியை வெளியிட்டார். என்னவென்றால்,
Talent திறமை, Trade வர்த்தகம், Tradition பாரம்பரியம், Tourism சுற்றுலா, Technology தொழில்நுட்பம். இந்த 5ம் தான் எனக்கு முக்கியம் என்று சொன்னவர் மோடி.
இதற்காக அவர் செய்தது என்ன? ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா? அத்தியாயம் பொருட்களின் விலையை முழுமையாக கட்டுப்படுத்துவேன் என்று சொன்னாரே? இன்றைக்கு அதைப்பற்றி அவர் பேசுகிறாரா? அரசியல் தலையீடு இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும் என்று உறுதி தந்தார். இப்பொழுது அரசியலுக்காக தன்னுடைய சுய லாபத்திற்காக, தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்காக அவற்றை பயன்படுத்துகின்றாரா? இல்லையா? எரிவாயு விலையை கட்டுப்படுத்துவேன் என்று சொன்னார். இன்றைக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றதா? அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்குவேன் என்று சொன்னார், 5 வருடத்தில் கல்வெட்டுகளை தான் உருவாக்கியிருக்கின்றார். இரும்பு பிரதமர் என்று மோடியை சொல்லுவார்கள். அவர் இரும்பு பிரதமர் அல்ல ஸ்டோன் பிரதமர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துவிட்டால், வரி நடைமுறையை எளிமைப்படுத்துவோம் என்று சொன்னார். ஆனால், ஜி.எஸ்.டி வரியைப் போட்டு எவ்வளவு பேரை இன்றைக்கு கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்? மாநிலத்திற்கு அதிகளவு நிதிநிலை அதிகாரத்தை வழங்குவோம் என்று சொன்னார். ஆனால், தமிழ்நாட்டிற்கு இன்னும் 12,000 கோடி ரூபாய் வரவேண்டி இருக்கின்றது. அதைப்பற்றி, அவர் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தனக்காக, நான் எதுவும் செய்யமாட்டேன் என்று சொன்னார். மகிழ்ச்சியடைந்தோம், ஆனால் இப்பொழுது விதவிதமான உடைகள் போடுகின்றார். கலர் கலராக தொப்பி அணிகின்றார். 10 இலட்சம் மதிப்புள்ள கோட் போடுகின்றார். எளிமையின் சின்னம் மோடியின் சாதனை இதுதான்.
வறுமையில் உள்ளவர்களுக்கு செயல்படுவது என்னுடைய பிரதான நோக்கம் என்று சொன்னாரா, இல்லையா? ஆனால், இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுக்கான காரியங்களை இன்றைக்கு ஆற்றிக்கொண்டிருக்கக்கூடிய நிலையைத்தானே மோடியின் மூலமாகப் பார்க்கின்றோம். மோடி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நான் இன்றைக்கு பட்டியல் போட்டுக்கொண்டிருந்தால் விடிந்து விடும். ஆனால், மோடி ஆட்சியில் நாடு விடியவில்லை.
நரேந்திர மோடியின் ஆட்சியில் இன்றைக்கு நாம் 15 ஆண்டுகாலம் இன்றைக்கு பின்னோக்கி போயிருக்கின்றோம். அவருடைய ஆட்சி மீண்டும் வந்துவிட்டால், வருவதற்கான வாய்ப்பில்லை, அதற்கான சூழ்நிலையும் கிடையாது ஒருவேலை வந்துவிட்டால் 50 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போய்விடுவோம் என்று நான் ஏற்கனவே, சென்னையில் தலைவர் கலைஞர் அவர்கள் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னேன்.
உங்கள் எல்லோரையும் நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இது சாதாரண தேர்தல் அல்ல, இந்தியாவில் இனியும் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தலாக இந்தத் தேர்தல் அமையப் போகின்றது. மீண்டும் பிரதமராக மோடி வந்துவிட்டால் 5 ஆண்டுகள் கழித்து தேர்தல் என்பதையே மறந்து விடுவோம். ஏனென்றால் நாடாளுமன்றத்திற்கு வராத, உச்ச நீதிமன்றத்தை மதிக்காத, ரிசர்வ் வங்கியை உதாசீனப்படுத்திய, சி.பி.ஐ அதிகாரிகளை பந்தாடி இருக்கக்கூடிய, மாநில அரசுகளை எல்லாம் மதிக்காத, மாநில முதலமைச்சர்கள் எல்லோரையும் கிள்ளுக்கீரையாக நினைத்து கொண்டிருக்கக்கூடிய, சொந்தக்கட்சியில் கூட யோசனைகள் கேட்க முடியாத நிலையில், நரேந்திர மோடியின் கையில் இன்றைக்கு இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது.
இது ஒரு பெரிய ஜனநாயக சாபக்கேடு. சில நாட்களாக அவர் மதத்தின் பெயரைச் சொல்லி, நாட்டின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்து விடலாமா என்ற திட்டத்தை இப்பொழுது போட்டுக் கொண்டிருக்கின்றார். தேசபக்தி என்பதை மோடியோ, மோடியின் கூட்டமோ, மொத்த குத்தகைக்கு எடுத்திடவில்லை. மத உணர்வையும், பக்தியையும், மோடியும் மோடியின் கூட்டமும் மொத்த குத்தகைக்கு எடுத்து விடவில்லை. நாடு என்பது அனைவருக்கும் சொந்தமானது. மதமும், கடவுளும் அவரவர் தனிப்பட்ட விஷயத்தைச் சார்ந்தது. இந்த இரண்டையும் தன்னுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக அவர் பயன்படுத்த முயற்சிக்கிறார். அப்படி செய்வது நாட்டிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். ஏன் மதத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
உண்மையில் இவர்கள் தான் தேசவிரோதிகள், இவர்கள் தான் மத விரோதிகள், என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகின்றேன். எனவேதான் நாம் மோடியை எதிர்க்கின்றோம். நாம் மோடியை எதிர்ப்பதற்கு என்ன காரணம்? அவர் ஒரு தத்துவத்தின் பிரதிநிதி, நாம் அந்த தத்துவத்திற்கு நேர் எதிராக இருக்கக்கூடிய பிரதிநிதிகள். அதனால்தான் மோடியை எதிர்க்கின்றோம், நம்முடைய கொள்கை வேறு அவர்களுடைய கொள்கை வேறு. அரசியலில் நிரந்தர எதிரிகளும் அல்ல, நிரந்தர நண்பர்களும் அல்ல, என்று சொல்லுவார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் அரசியலில் நமக்கு நிரந்தர எதிரி உண்டு. அத்தகைய எதிரி தான் நரேந்திர மோடி, அவர் அப்படிப்பட்ட நிலையில் எதிரியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
நான் மீண்டும் சொல்லுகின்றேன். நரேந்திர மோடி என்றால் தனிப்பட்ட மோடியை குறிப்பிடுவது அல்ல, அவர் ஏற்றுக்கொண்ட தத்துவம் நமக்கு எதிரி, அந்த மோடியோடு சேர்ந்து இருக்கக்கூடிய அனைவரும் நமக்கு எதிரிகள் தான். இந்தியாவை வளர்த்து விட்டார் மோடி என்று கொக்கரிக்கிறார்கள். இவரிடம் தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.
இப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். இது மிக மிக மோசமான ஒரு பொய். கிராமத்தில் ஒரு பழமொழியை வேடிக்கையாகச் சொல்வார்கள் "பொய்யைச் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா" என்று, அதுபோல் இந்தியாவை அவர் வளர்த்து விட்டார் என்று பொய் சொல்லுகிறார்கள். இந்தியாவிற்கே அவர் பாதுகாப்பாக இருக்கின்றார் என்று கடைந்தெடுத்த வடிகட்டிய பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
நான் கேட்கின்றேன் உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 103 வது இடத்தில் இருக்கின்றது. உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவிற்கு 140 வது இடம். மனிதவள மேம்பாட்டு மேம்பாட்டு தர வரிசையில் இந்தியாவிற்கு 130வது இடம். இளைஞர்கள் மேம்பாட்டு தரவரிசையில் இந்தியாவிற்கு 134வது இடம். வேலைவாய்ப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 103வது இடம். பத்திரிக்கை சுதந்திரம் உலக நாடுகளில் இந்தியாவிற்கு 138வது இடம். அமைதியான உலக நாடுகளில் இந்தியாவிற்கு 136வது இடம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 177வது இடம். வேலைவாய்ப்பு என்பது 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கின்றது. ஜி.டி.பி எனப்படும் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது. இவை அனைத்தும் பல்வேறு அமைப்புகள் மூலமாக கிடைத்திருக்கக்கூடிய புள்ளிவிபரத் தகவல்கள். நான் கேட்கின்றேன் இந்தியா வளர்ந்து இருக்கின்றதா? இந்தத் தொகுதியில் இன்றைக்கு நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய பி.ஜே.பி-யின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் , அண்மையில் ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வெளியிட்டிருக்கின்றார். அது என்னவென்றால் மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் மதக்கலவரம் நடக்கவே இல்லை. என்ற ஒரு அரிய கருத்தை அவர் சொல்லியிருக்கின்றார்.
நான் அவருக்கு சொல்ல விரும்புகின்றேன். இந்திய நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 06 தேதி நடந்த ஒரு விவாதம். என்ன விவாதம் என்றால் இந்தியாவில் நடந்த மதக் கலவரங்கள் குறித்து ஒரு உறுப்பினர் கேள்வி கேட்டார். கேள்வி கேட்ட நேரத்தில் உள்துறை இணை அமைச்சர் அன்ஸ்ராஜ் கங்காராம், அதற்கு பதில் சொன்னார். பதில் சொல்லுகின்ற பொழுது சொல்லுகின்றார். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரங்கள் 751, இதில் கொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர் காயமடைந்தவர்கள் 2264 பேர், இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரங்கள் 703, இதில் கொலை செய்யப்பட்டவர்கள் 86 பேர், காயமடைந்தவர்கள் 2321 பேர், இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் 822, இதில் கொலை செய்யப்பட்டவர்கள் 111 பேர், காயமடைந்தவர்கள் 2384 பேர், எனவே மாநில வாரியாக அந்த புள்ளிவிபரம் இருக்கின்றது, அதிகமான கலவரங்கள் எங்கு? நடந்து இருக்கின்றது என்றால், உத்திரப்பிரதேசத்தில்.
அடுத்து எங்கு என்றால் குஜராத் மாநிலத்தில், அதற்கடுத்து பீகாரில், அதற்கடுத்து மகாராஷ்டிராவில். இவைகள் அனைத்தும் யார் ஆளக்கூடிய ஆட்சி, பி.ஜே.பி ஆளக்கூடிய இடங்கள். பி.ஜே.பி செல்வாக்கு பெற்று இருக்கக்கூடிய மாநிலங்கள். அங்கு நடந்தவற்றை இந்தப் புள்ளிவிவரம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இதில் நமக்கு ஒரு பெருமை என்னவென்று கேட்டீர்கள் என்றால், தமிழகத்தில் ஒரே ஒருவர் தான் இறந்துள்ளார் என்று அந்தப் புள்ளி விவரம் சொல்லுகின்றது. காரணம் இது தந்தை பெரியார் பிறந்த மண் அந்த மண்ணை கலவர பூமியாக மாற்ற இன்றைக்கு பி.ஜே.பி நினைக்கின்றது. அதனால்தான் அவர்களை தடுக்க நினைக்கின்றோம். இறுதிவரை தடுத்தே தீருவோம், அதில் எங்களுக்கு எந்த மாறுபாடும் கிடையாது. அதைத் தடுப்பதற்காக தான் சபதம் ஏற்கின்றோம் உறுதி எடுத்துக்கொண்டு இந்தத் தேர்தல் களத்தில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தினமணி பத்திரிகையில், தொழில் நகரத்தில் வெற்றிக் கொடி நாட்டப்போவது யார்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்தக் கட்டுரையில் பல செய்திகள் வந்தது, நான் சிறு சிறு குறிப்புகளாக தலைப்புச் செய்தியாக சொல்ல விரும்புவது, அதில் குறிப்பிடுகின்றார்கள். மின்வெட்டு இருக்கின்றது, ஜி.எஸ்.டி பிரச்னை இருக்கின்றது, தொழிற்சாலைகளை மூடி இருக்கின்றார்கள், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது, ஜவுளித் தொழில் நசுங்கிப் போய் இருக்கிறது, கிரைண்டர்கள் தயாரிக்கும் கூடங்கள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றது, தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கிடையாது, விமான நிலையங்கள் விரிவாக்கம் செயல்படாத நிலையில் இருக்கின்றது, இவை எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்னை இப்பொழுது பொள்ளாச்சி பிரச்னை.
நான் நேற்றைய தினம் கோவையில் தங்கியிருந்தேன். தங்கியிருந்த அறையில் இருந்து வெளியில் வரும்பொழுது இரண்டு பெண் காவலர்கள் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள் என்றார்கள். இதுதான் அனைவர் கையிலும் செல்போன் வந்து விட்டதே, எனவே அனைவரும் செல்பி எடுக்க ஆசைப்படுகின்றார்கள். பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் காரணம் அடுத்து நாம் தான் வரப்போகின்றோம் என்ற நம்பிக்கையும் அசைக்க முடியாத உணர்வும் இப்பொழுது வந்திருக்கின்றது. ஆர்வத்தோடு கேட்டதால் சரி எடுத்துக்கொள்ளுங்கள் என்று நானே வந்தேன். புகைப்படம் எடுத்தோம். நான் ஒரு மரியாதைக்காக எந்த ஊர் நீங்கள் என்று கேட்டேன்? அப்படியே வெட்கப்பட்டு இருவரும் திரும்பிக் கொண்டார்கள். அதன் பிறகு சொன்னார்கள் பொள்ளாச்சி என்று. பொள்ளாச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் வந்துள்ளது. பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு கடந்த 7 வருடமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை.
பெண்களை பலவந்தப்படுத்தி தோட்டங்களில், வீடுகளில் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படம் எடுத்து வீடியோ காட்சிகளாக பதிவு செய்து அதன்பிறகு அதை அவர்களுக்கு அனுப்பி மிரட்டி அச்சுறுத்தி கோடிகோடியாக பணம் சம்பாதித்து, ஏழு வருடமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு கொடுமை. இதற்குப் பின்னணி யார்? துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் . அவருடைய மகன் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார், என்று ஆதாரத்தோடு செய்திகள் வெளிவந்து விட்டது. பெண்களை காரில் கடத்தி கொண்டு போகின்ற பொழுது ஒரு பெண் தப்பித்து குதிக்கும் பொழுது அதே இடத்தில் இறந்தும் போயிருக்கிறார்.
அப்பொழுது அந்தக் காரில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இருந்திருக்கின்றார், என்ற செய்தி ஆதாரத்தோடு வந்திருக்கின்றது. இந்த சம்பவம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது. முறையாக புகார்கள் கொடுத்தால் அதை யாரும் எடுப்பதே இல்லை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்ணின் சகோதரர் புகார் தந்திருக்கின்றார். தந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், 50 அல்லது 60 பெண்களின் மானத்தை காப்பாற்றி இருக்க முடியும். அவர்களை நிச்சயமாக காப்பாற்றி கரை சேர்த்திருக்க முடியும். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த ஆட்சி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்திருக்கிறது.
நான் கேட்கின்றேன் 7 வருடமாக அந்தப் பகுதியில் காவல் துறையே இல்லையா? உளவுத்துறை என்பதே இல்லாமல் போய் விட்டதா? ஆட்சி என்பதே காணாமல் போய்விட்டதா? பாதுகாப்பிற்கு இருக்கக்கூடியவர்கள். இந்தக் குற்றத்திற்கு காரணமான அவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்றார்களே தவிர, அதற்குரிய நடவடிக்கையை இதுவரையில் எடுக்க முடியவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. எனவேதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இவற்றையெல்லாம் நாங்கள் பிரச்சாரத்தில் பேசுகின்றோம் என்று திசை திருப்புவதற்கு இப்பொழுது அவர் பிரச்சாரத்தில் பேசுகின்றார். அவருக்கும் தற்பொழுது பிரச்சாரத்திற்கு நிறைய கூட்டம் சேருகின்றது. எம்.ஜி.ஆர் போல் நினைத்துக் கொண்டு திறந்த வேனில் செல்கின்றார். ஒருத்தர் ஒருத்தர பார்த்து கும்பிடுகிறார். அவர்களுக்கு அது ஒரு அலாதிப் பிரியம், போகட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. போகின்றவர் என்ன பிரச்சாரத்தை நடத்துகின்றார் என்று கேட்டால், இன்று காலை தூத்துக்குடியில் என்னை மையப்படுத்தி பேசியிருக்கின்றார். காரணம் அவருடைய கொடநாட்டு விவகாரத்தை நான் சொல்கின்றேன்.
பொள்ளாச்சி விஷயத்தை வெளிப்படையாக மக்களிடத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம். அந்த ஆத்திரம் தாங்க முடியாமல், என் மீது பல வழக்குகள் இருக்கின்றது. அவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவேன் என்று அண்ணா நகர் ரமேஷ் என்ற என்னுடைய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார், எப்பொழுது என்றால் 2001ல். அந்த நேரத்தில் இதைப்பற்றி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சியாக இருந்தபொழுது கேட்டார். நான் உடனடியாக எழுந்து என் மீது எந்தக் குற்றமும் கிடையாது. வேண்டுமென்றால் எந்த விசாரணையும் வையுங்கள். அதை சந்திக்க தயார் என்று அன்றைக்கே நான் சொன்னேன். உங்க அம்மாவிற்கே, அப்பொழுது நான் சொல்லிவிட்டேன்.
இப்பொழுது நீங்கள் பிரச்சாரத்தில் அந்த விவகாரத்தை எடுப்பேன் உள்ளே தள்ளுவேன் என்கின்றீர்கள். நான் கேட்கின்றேன் 2011ல் ஆட்சிக்கு வந்தீர்கள் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தான் பொறுப்பு ஏற்றார். அவர் மறைந்து விட்ட காரணத்தினால் இப்பொழுது நீங்கள் ஆட்சியில் இருக்கின்றீர்கள். 2011ல் இருந்து 8 வருடமாக நீங்கள் தான் ஆட்சியில் இருக்கின்றீர்கள். நான் தவறு செய்திருந்தால், என் மீது உண்மை இருந்திருந்தால், அப்பொழுது ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? உனக்கு தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் ஆண்மை இருந்தால் நீ நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டுமா? வேண்டாமா? இப்பொழுது போய் திசைதிருப்புவதற்காக உங்கள் மீது ஏற்பட்டிருக்கக்கூடிய களங்கத்தை திசை திருப்புவதற்கு, நான் இப்போதும் சொல்கின்றேன். நீங்கள்தான் முதலமைச்சர் உங்களிடம் தான் அதிகாரம் இருக்கின்றது ஆட்சியும் உங்கள் கையில் தான் இருக்கின்றது வழக்குப் போடுங்கள். எந்த நீதி மன்றத்திற்கு வரவேண்டும்? வருவதற்கு நான் தயார்.
நான் பனங்காட்டு நரி எந்த சலசலப்பு இருக்கும் தி.மு.க அஞ்சிடாது. செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு கொலையை செய்துவிட்டு கொள்ளை அடித்துவிட்டு இன்றைக்கு நீங்கள் மக்களிடத்தில் வந்து ஓட்டு கேட்கின்றீர்கள் என்றால் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு காத்திருக்கின்றார்கள். வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். அந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த கோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதி கூட்டத்தின் வாயிலாக நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
நம்முடைய வேட்பாளர் நடராஜன் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.’’