![lo](http://image.nakkheeran.in/cdn/farfuture/pLGcD7pTAnlQvp6OxT8C-mGwr0uJfx76pXOW-ncG08E/1540079658/sites/default/files/inline-images/lock1_0.jpg)
கொளத்தூர் அருகே, கனிம நிறுவன (டான்மேக்) ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 20, 2018) அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி (56). மேட்டூரில் உள்ள தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனத்தில் (டான்மேக்) பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மயில்சாமிக்கும், அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் மகாதேவன் (55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, மகாதேவன், அவருடைய மகன் நந்தகுமார் (21) மற்றும் உறவினர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு மயில்சாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென்று அவர்கள் மயில்சாமியை கற்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார். இதையடுத்து மகாதேவனும், நந்தகுமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முள்புதர் அருகே பதுங்கி இருந்த மகாதேவன், நந்தகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனர்.