Skip to main content

மூன்று கொலைகள் செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை! விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020
Villupuram court

 

விழுப்புரம் அருகே மூன்று பேரைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி மூன்று ஆயுள் தண்டனை மற்றும் ரூ.75,000 அபராதம் விதித்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் எம். குச்சிப்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவர், தனது சகோதரர் மதியரசன், மூர்த்தி ஆகியோருடன் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ‘நல்லாண்பிள்ளை பெற்றாள்’ பகுதியைச் சேர்ந்த சேகர், லாவன்யா, சிலம்பரசன் ஆகியோரைக் கொலை செய்து தனது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில்  புதைத்திருந்தார்.

 

இக்கொலை சம்பவம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், 2010ல் முருகன் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் கொலை செய்த சம்பவங்களைக் கூறியுள்ளார். கணவன் என்பதால் ராஜேஸ்வரியும் இச்சம்பவத்தை மறைத்துள்ளார்.

 

கடந்த 2012 ம் ஆண்டு முருகனின்  மகளான பார்கவி சதீஷ்  என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து வைக்கக்கோரி தனது தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததுமில்லாமல் சதீஷை திருமணம் செய்தால் வீட்டின் பின்புறம் மூன்று பேரை கொன்று புதைத்தது போன்று உன்னையும் கொன்று புதைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன பார்கவி தனியார் தொலைக்காட்சியை நாடி தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரியும், தனது தந்தை 2012 ஆம் ஆண்டு மூன்று பேரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

 

அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சேகரின் மனைவி ஜீவா, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தனது கணவன், மகளைக் காணவில்லை என புகார் தெரிவித்ததின் பேரில், காவல்துறை விசாரணை செய்து மூன்று உடல்களைத் தோண்டி எடுத்தனர். இது தொடர்பான வழக்கில் முருகன், மதியரசன், மூர்த்தி ஆகியோரைக் கைது செய்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி சாந்தி முதல் குற்றவாளியான முருகனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 75 ஆயிரம் அபராதமும், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக கூடுதலாக 2 வருடம் சிறை எனவும் தீர்ப்பு வழங்கினார்.

 

இதே போன்று இரண்டாவது குற்றவாளியான மதியரசனுக்கு ஒரு ஆயுள் தண்டனை, 25 ஆயிரம் அபராதம் மற்றும் கொலைக் குற்றத்தை மறைத்ததாக 2 வருடம் தண்டனையும் வழங்கினார். மூர்த்தி என்ற மூன்றாவது குற்றவாளி இறந்து விட்டார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்