தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இருந்து கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.
அவை, ‘தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர் ஏக்கர் ஒன்றுக்கு இடுபொருள் இழப்பீடாக ரூபாய் பத்தாயிரம் வழங்கவேண்டும். தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி கொள்முதல் செய்திட வேண்டும்.
காவிரி டெல்டாவில் 2020-21 காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஜீரோ என கணக்கிடப்பட்டு 184 கிராமங்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பதையும் அனுமதிக்கப்பட்டும் இழப்பீடு வழங்காமல் காலம் கடத்துவதையும் மறுபரிசீலனை செய்து விடுபடாமல் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’என கோரிக்கைகள் அடங்கிய பேனர் மற்றும் பதாகைகள் ஏந்தியவாறு கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர்.