Skip to main content

கோரிக்கை வைத்த மாணவர்கள்; உடனடியாக நிறைவேற்றிய சபாநாயகர்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

tn assembly speaker appavu immediate action taked for school bus

 

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு நேற்று ராதாபுரம் அருகே உள்ள வையக்கவுண்டம்பட்டி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பேருந்துக்காக பள்ளி குழந்தைகள் காத்துக்கொண்டு இருந்தனர். சபாநாயகர் கார் வருவதை கவனித்த பள்ளி மாணவ மாணவிகள் சபாநாயகரின் காரை பார்த்து கை காட்டி உள்ளனர். இதனை கவனித்த சபாநாயகர் அப்பாவு காரை உடனடியாக நிறுத்த தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த மாணவர்களிடம் சபாநாயகர் அப்பாவு நலம் விசாரித்தார்.

 

அப்போது மாணவ மாணவிகள் சபாநாயகரிடம், வையக்கவுண்டம்பட்டியில் இருந்து  சுமார் 30 மாணவ மாணவிகள் சிலாத்திகுளம் அருகே 1 கி.மீ. தொலைவில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறோம். ஆனால், நாங்கள் இங்கு இருந்து பயணம் செய்யும் அரசு பேருந்து எங்களை சிலாத்திகுளம் பேருந்து நிறுத்தத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் 1 கி.மீ. தூரம் நடந்து செல்வதால் பள்ளிக்கு தாமதமாக செல்ல நேரிடுவதாகக் கூறினார்.

 

மாணவர்களின் கோரிக்கை குறித்து சபாநாயகர் அப்பாவு உடனடியாக திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்ததுடன் பள்ளி அருகிலேயே மாணவர்களை இறக்கிவிட வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது அங்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி பொதுமேலாளர் பேசுவதாக கூறி அலைபேசியை ஓட்டுநரிடம்  சபாநாயகர் அப்பாவு கொடுத்தார். அப்போது மாணவர்களை பள்ளி அருகிலேயே இறக்கி விடுமாறு பொதுமேலாளரும் ஓட்டுநருக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் சபாநாயகர் அப்பாவுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்