
ஃபெங்கல் புயல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதுமே பெருமழையை தந்தது. இந்த மழையால் பல நூறு ஏரிகள் நிரம்பின. இந்த புயலால் பல்லாயிரம் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு, வாழை பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மாவட்டத்தில் மனித உயிரிழப்பு இல்லை என நினைத்த நிலையில் அந்த கோரத் தகவல் வெளியானது. திருவண்ணாமலை நகரத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரே தேங்காதது எனச்சொல்லப்பட்டு வந்த நிலையில் மனித தவறுகளால் அது பொய்யானது.
திருவண்ணாமலையில் டிசம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி நகர் 11வது தெருவில் உள்ள வீடுகளின் மீது மலையின் மேற்கு பகுதியில் சிறிய பகுதி சரிந்தது. சுமார் 40 டன் அளவிலான பாறை உருண்டு வந்து விழுந்ததில் 2 வீடுகளை முற்றிலும் மூடிவிட்டது. அந்த தெரு முழுவதும் 7 அடி உயரத்துக்கு மண் கொண்டுவந்து கொட்டி விட்டது. மழையாக இருந்ததால் இந்த தகவல் வெளியே தெரியவில்லை. இரவு 7 மணிக்கு மேலே இந்த தகவல் வெளியே தெரிந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தவர் அங்கிருந்த வீடுகளில் வசித்த 300க்கும் அதிகமான பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிவைத்தார்.

அப்போது பறைகள் விழுந்த வீடுகளில் இருந்த ராஜ்குமார் அவரது மனைவி மீனா, பிள்ளைகள் கௌதம், இனியா, மற்றொரு குடும்பத்தை சேர்ந்த ரம்பா, வினோதினி, மகா என்னவானார்கள் என தற்போது வரை தெரியவில்லை. அவர்களின் வீடுகள் முழுவதும் மண்ணால் மூடியுள்ளது. இதனால் மீட்புப் பணிகளை வேகப்படுத்தியபோது, மாவட்ட வருவாய் பேரிடர், போலீஸ், தீயணைப்புத்துறையினரால் முடியாது என்பது முடிவானதும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தந்தனர். காலை முதல் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மலைச்சரிவில் வீட்டுக்குள் சிக்கியதாகக் கூறப்படும் இரண்டு பெரியவர்கள், 5 குழந்தைகள் என ஏழு பேரின் நிலை என்னானது எனத்தெரியாமல் அவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் கவலையிலும், கண்ணீரோடும் உள்ளனர். மூன்று குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மண்ணின் தன்மையை பொறுத்து அந்த பகுதியில் மீட்புப் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.