வாழப்பாடி அருகே, நிலத்தகராறில் கல்லால் தாக்கி விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள குமாரசாமியூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயதை 43). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமான உறவினர்கள்.
இந்நிலையில், அக். 13- ஆம் தேதி தோட்டத்தில் வேலி அமைக்கும் பணியில் செல்வராஜ் ஈடுபட்டு இருந்தார். இதற்காக சங்கர் நிலத்தின் வழியாக கட்டுக்கற்களை ஏற்றிச் சென்றுள்ளார். இதைப் பார்த்துவிட்டு சங்கர், தன்னுடைய நிலத்தின் வழியாக எதற்காகச் சென்றாய்? எனக்கேட்டு, அவரிடம் தகராறு செய்தார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு மூண்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த செல்வராஜ், கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து சங்கரை சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இந்த சம்பவத்தில் செல்வராஜூக்கு மட்டுமின்றி அவருடைய மருமகன் வெங்கடேஷ் (வயது 35) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உள்ளூரிலேயே ஓரிடத்தில் பதுங்கி இருந்த செல்வராஜ், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், குமாரசாமியூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.