கரோனா என்கிற கொடிய காலம் நீண்டு கொண்டே வருகிறது. தினக்கூலி உழைப்பாளர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை அனைவரின் வாழ்வையும் ஊடரங்கு மூலம் முடமாக்கி விட்டது இந்த கரானா வைரஸ்.
யானை பசிக்கு சோளப்பொறி போல ஒரு சிறு உதவியை கொடுத்து ஒதுங்கிக் கொண்டது ஆளும் அரசுகள். அன்றாட உணவுத் தேவைக்கே அவதிப்படும் பரிதாப நிலைக்கு கோடிக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டனர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க., அதே போல் சில இயக்கங்களும், தனியார் அமைப்புகள், நிறுவனங்களும் மக்களுக்கு உதவியது.
மக்களை போல தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நிலமையும் பரிதாபகரமாகத் தான் இந்த இரு மாதங்களும் கடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை தலைநகராக கொண்டு இயங்கி வரும் பிரபல நிறுவனம் "சக்தி மசாலா" நிறுவனத்தின் உரிமையாளர்களான பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உதவ முன்வந்தனர்.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க செயலாளர் ஜீவாதங்கவேல், தலைவர் ரமேஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் மேலும் அவ்வமைப்பின் நிர்வாகிகள் இணைந்து, சக்தி மசாலா நிறுவனம் ஒவ்வொருவருக்கும் வழங்கிய தலா 25 கிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து நிறுவன பணியாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் இருப்பிடம் சென்றே நேரில் வழங்கினார்கள்.
தொழில் செய்வது மட்டுமல்ல அந்த தொழிலின் மூலம் கிடைக்கும் வருவாயை மிகவும் வாழ்வியல் நெருக்கடிக்குள்ளான இக்கால கட்டத்தில் மனமுவந்து தானம் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது என ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் சக்தி மசாலா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.