தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடி வாசலுக்கு முன்பு தேங்காய் நார் கொட்டும் பணி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவனியாபுரத்தில் வீட்டு வாசல் முன்பே வாடிவாசல் அமைக்கப்பட்டதற்கு பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தியின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின் கயிறுகளை அரிவாளால் அவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவனியாபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் தான் தற்காலிக வாடிவாசல் ஒவ்வொரு வருடமும் அமைக்கப்படுகிறது. அதன்படியே இம்முறையும் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை ஓட்டி அதிலிருந்து 1.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் இரும்பு தகடுகள் மற்றும் கட்டைகளால் வைத்து தடுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வீட்டு வாசலிலேயே தடுப்பு அமைத்ததாக எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தியின் மனைவி காளியம்மாள் வாக்குவாதம் செய்தார்.
நாளை ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கின்ற நிலையில் இன்று காலையிலேயே தடுப்புகளை வைத்து அடைத்து விட்டால் எப்படி வெளியே செல்ல முடியும். எப்படி கடைகளுக்கு செல்வது, காய்கறிகளை வாங்குவது. வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் எப்படி வீட்டுக்குள் வருவார்கள் என வாக்குவாதம் செய்ததோடு அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவலர்கள் முன்னிலையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, தடுப்பு கயிறுகளை வெட்ட ஆரம்பித்தார். அதிகாரிகளும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.