![To the family of a policeman who incident in a road accident 10 lakh relief aid provided by the police](http://image.nakkheeran.in/cdn/farfuture/vpLreX8nLLlvOZyC5v6hdnfhkiju74XRGaGQ_ydj9kM/1641493680/sites/default/files/inline-images/ig4343.jpg)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பணிபுரிந்து வந்த போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணி, கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த காவலரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக, மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் உடல் நிலக்கோட்டை அருகே இருக்கும் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி.லாவண்யா உள்ளிட்ட காவல்துறையினர், பாலசுப்பிரமணியன் உடலை தோளில் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில்தான், சாலை விபத்தில் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த காவல்துறையினரும் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தங்களால் முடிந்த பணத்தை வழங்கினர். இதன் மூலம் ரூபாய் 10 லட்சம் திரட்டப்பட்டது. அந்த நிதியை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனும் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நேரில் வழங்கினர்.