Skip to main content

போலி பத்திரிகையாளர்கள் நேர்மையாகவா சொத்து சேர்த்துள்ளார்கள்?- விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

போலி பத்திரிகையாளர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் நேர்மையாகத்தான் அந்தச் சொத்தை சம்பாதித்துள்ளார்களா? என சிறப்புக் குழுவை அமைத்து விசாரிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  


சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் அறிக்கைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் எனக் கூறி சேகராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, போலி பத்திரிகையாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு எழுப்பியிருந்தது. பத்திரிகையாளர் என்ற பெயரை மோசடிப் பேர் வழிகள் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகவும், பத்திரிகையாளர்கள் சங்கங்களை போலி நிருபர்களே நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

fake journalists asset properties chennai high raised questons


இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் நேற்று (21.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் மனோகரன், தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன. அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.
 

அதுபோல, காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், போலி நிருபர்கள் தொடர்பாக வெவ்வேறு இடங்களில் ஏராளமான புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதன் மாவட்ட வாரியான விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.


இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நிருபர்கள் என்ற பெயரில், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டுவதும், தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாகிவிட்டதாகத்தெரிவித்தனர். மேலும், சந்தேகிக்கப்படும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் விற்பனை அளவு என்ன? அதன் உரிமையாளரின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் நேர்மையாகத் தான் அந்தச் சொத்தை சம்பாதித்துள்ளார்களா? என்பது தொடர்பாக, தேவைப்பட்டால் சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர். 


தொடர்ந்து, பத்திரிகைகளின் விற்பனையைத் தணிக்கை செய்யும் நிறுவனத்தை இந்த வழக்கில் தானாக முன்வந்து இணைத்த நீதிபதிகள், தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 5- ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்