Skip to main content

நீட் தேர்வில் தோல்வி; மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Failure in NEET The father also due to the tragedy of his son 

 

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை குரோம்பேட்டை அடுத்து இருக்கக்கூடிய குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர் 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு முறையாகப் பயிற்சி எடுத்து வந்தார். தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்ட நிலையில் முதல் தேர்வைச் சந்தித்தார். முதல் முறை தேர்ச்சி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பயிற்சி பெற்று இரண்டாவது முறையும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். அதிலும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.

 

மேலும் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரைப் பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில், மாணவன் ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்  மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்