சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமில்லாத வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து படகு சாவரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்து செல்வார்கள்.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுபேற்றதும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தபடும் என்று பதவியேற்ற முதல் கூட்டத்தொடரில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு ரூ 14.7 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டப்பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி சுற்றுலா மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா மையத்தில் 5.27 ஏக்கரில் நவீன வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகள். வாகன நிறுத்தும் இடம், குழந்தைகள் பூங்கா, உணவகம், சுற்றுலா சதுக்கம் மற்றும் இரவில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தளமாக அமைய உள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அமைத்துள்ள கருத்தியல் காட்சிக் கூடத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், கடலூர் மாவட்டச் சுற்றுலா அலுவலர் முத்துசாமி, சிதம்பரம் வட்டாட்சியர் செல்வக்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை பேருராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் வருவாய்த்துறையினர். வனத்துறையினர் உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.