சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த மாத இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் அது குறித்தான விவகாரங்களை இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக அலுவலகத்தில் வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இரு தரப்பினர்களாக பிரிந்து ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்பொழுது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தொண்டர்களை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் வாக்குவாதம் நிற்கவில்லை. அப்போது அங்கு காத்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் கையெடுக்க ஒலிபெருக்கியில் 'நாளை நமதே' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே இந்த நாளும் நமதே' என்ற பாடலை சத்தமாக ஒலிக்க வைத்தார். 'தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்ற பாடல் வரிகளைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் அமைதியாகச் சென்றனர்.