தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.
பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.