தமிழக இந்து சமய அறநிலையத்துறை சீல் வைத்த பள்ளி, தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள 35 ஏக்கர் நிலத்தில், தர்மமூர்த்தி ராவ்பகதூர் காலவள கண்ணன்செட்டி அறக்கட்டளைக்குச் சொந்தமான சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அந்தப் பள்ளியில், ஏறத்தாழ ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 1999-ஆம் ஆண்டுடன் குத்தகை முடிந்ததாலும், முறையாக வாடகை வராததாலும், ஜூலை 23-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறையினர் பள்ளி வளாகத்திற்கு சீல் வைத்தனர்.
ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கும் சீதா கிங்க்ஸ்டன் பள்ளிக்கு சீல் வைத்ததால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில், மாணவர்களின் பெற்றோர்களான டி.ஜெரினா, ஏ.ராமதூதன் உள்ளிட்ட 7 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்களது மனுவில், அறநிலையத்துறை உதவி ஆணையரின் நடவடிக்கை குறித்து ஜூலை 6-ஆம் தேதியே மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கும், கோவில் செயல் அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால், மாணவர்களின் நலனைக் காக்கும் நோக்கில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படவில்லை.
மாணவர்களின் நிலை கருதி, மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச 6 கிரவுண்ட் நிலத்தை எடுப்பதற்குக்கூட, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. பள்ளி இயங்கும் கட்டிடத்திற்கு சீல் வைப்பதற்கு முன்பாக, பெற்றோர்களிடம் அறநிலையத்துறை முறையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, தேவையான 6 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத் துறையிடமிருந்து பெற்று, பள்ளி செயல்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரும், இந்துசமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.