பொங்கலையொட்டி சென்னை கோயம்பேட்டில் 15 சிறப்பு பேருந்து முன்பதிவு மையங்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பயணி ஒருவரிடம் பணத்தை பெற்று அதற்கான டிக்கெட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்தார்.
மேலும் தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா ஒரு சிறப்பு பேருந்து முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முன்பதிவு மையங்களில் காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பொதுமக்கள் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து குறித்த தகவல், புகாருக்கு 94450- 14450, 94450- 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணைய தளங்களைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து நாளை (10.01.2020) முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு இடங்களுக்கு 16,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களின் முக்கிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,095 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.