Skip to main content

'புதுசா வர்றவனெல்லாம் திமுக அழியனும்னு பேச இதுதான் காரணம் ' - முதல்வர் தாக்கு

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
nn

கொளத்தூர் பெரியார் நகரில் அனிதா அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ''மத்திய அரசு வெளியிடும் பட்டியல்களில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு அதன் செயல்பாடுகளையும் நான் நேரில் ஆய்வு செய்கிறேன். நாளை கூட கோவை மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய உள்ளேன்.

இன்று சிலர் போன வருடம் மழைநீர் தேங்கியிருந்த படத்தை எடுத்துப்போட்டுப் பார்த்தீர்களா இந்த ஆட்சியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. ஒரு மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது என சொல்கிறார்கள். எல்லாரையும் சொல்லவில்லை சிலர் செய்கின்றனர். ஏனென்றால் திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதுதான் காரணம். இதனால் தான் யார் யாரோ வர்றவனெல்லாம், புதுசு புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக ஒழியனும் அழியனும் என்ற நிலையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் பணிவோடு கேட்டுக் கொள்ளவது  இந்த மூன்றாண்டு காலத்தில், நான்கு ஆண்டுகளை தொடக்கூடிய இந்த நிலையில் செய்திருக்கக் கூடிய சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வரியில் சொன்னால் அண்ணா சொல்வார், 'வாழ்க வசவாளர்கள்' என்று சொல்வார். அதைத்தான் நான் சொல்ல முடியும்.

நான் அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை. நம்முடைய போக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற போக்குதான். தேவை இல்லாமல் எல்லாருக்கும் நாங்கள் பதில் சொல்லும் அவசியம் இல்லை. எங்களுக்கு தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றுவதற்கே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையுடன் ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறீர்களோ அந்த நம்பிக்கையோடு உங்களுக்கு பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம். அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம் என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்'' எனப்பேசியுள்ளர்.

சார்ந்த செய்திகள்