ஊரக உள்ளாட்சி தோ்தலின் முதல் கட்ட வாக்குபதிவு நாளை 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்நிலையில் குமரி மாவட்டம் சகாயநகா் ஊராட்சி தலைவா் பதவிக்கு திருநங்கையான ராபியா போட்டியிடுகிறார். குமாரி மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே திருநங்கை இவா் தான்.
![Local body election-Transgender candidate-Threat](http://image.nakkheeran.in/cdn/farfuture/UfzNyQmqfu3RRJT7nALhqQQvy6IUDBcaLzGIKhqWrqQ/1577339741/sites/default/files/inline-images/1_294.jpg)
இந்நிலையில் ராபியா தனது ஆதரவாளா்களுடன் கலெக்டா் மற்றும் எஸ்பி-யை சந்தித்து தன்னை சிலா் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "சகாயநகா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். அந்த ஊராட்சி மக்களின் விருப்பத்தின் பேரில் தான் தலைவா் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
ஆரம்பத்தில் என்னை போட்டியிட கூடாது என்று போனில் சிலா் மிரட்டினார்கள். பின்னா் மனுவை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினார்கள். அதன்பிறகு பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என மிரட்டினார்கள்.
தற்போது நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் திடீரென்று முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்து சிலா் மிரட்டி செல்கின்றனா். மேலும் நான் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், எனது உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பாதுகாப்பு கேட்டுள்ளேன்" என தெரிவித்தார்.