
'பட்டியலினத்தோர் பிரச்சனைகளில் மேஜர் பார்ட்னர் விசிக அமைதியாக்கப்படுவது ஏன்?' என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவை குறிப்பிட்டு பேசுகையில், ''வேங்கை வயல் பிரச்சனைக்கு ஏன் திருமாவளவன் போகவில்லை? யார் தடுத்து நிப்பாட்டினார்கள்? எந்த அதிகார சக்தி தடுத்துநிறுத்தியது? எங்கள் தலைவர் விஜய் ஒரு பத்திரிகை மேடையில் ஒட்டுமொத்த வேங்கைவயல் கிராம மக்களையும் அழைத்து, அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கு மரியாதை கொடுத்த மாதத்தில் காவல்துறை ஒரு கேவலமான செயலை செய்தார்கள். குற்றம் சொன்னவர்களையே குற்றவாளிகள் ஆக்கினார்கள்.
அதே பத்திரிகையில் மூன்று பேரும் பேட்டி கொடுத்தார்கள், 'நாங்கள் மலம் கலந்த தண்ணீரை குடிக்கும் பொழுது கூட எங்களுக்கு இந்த அவமானம் இல்லை; ஆனால் நாங்கள் தான் அதைக் கலந்தோம் என சொல்லக்கூடிய அவமானம் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற ஒரு வேதனையை தந்தது' என அந்த பேட்டியில் பார்த்தோம். உடனே ஒரு கேள்வி 'நீங்கள் ஏன் வேங்கை வயலுக்கு போகவில்லை?' என்கிறார்கள். நாங்கள் போவோம். தீர்வு கொடுப்பதற்காக நாங்கள் போவோம்.
இங்கு தலித் பிரச்சனைகள் எவ்வளவோ பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. கொடியேற்ற முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை. பொருளாதாரம் வந்தால் மலத்தை கலக்குவது; படித்தால் வாயில் வெட்டுவது; பைக் ஓட்டினால் கையை வெட்டுவது என பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. உங்களுடைய மேஜர் பார்ட்னர் விசிக ஏன் அமைதியாக்கப்படுகிறது. திருமா மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. நீங்கள் தான் (திருமாவளவன்) 40 வருடமாக குரல் கொடுத்தீர்கள். இன்று நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய உழைப்பையும், உங்களுடைய பயணத்தையும் நாங்கள் இழிவு படுத்தவில்லை. ஆனால் திமுக என்கிற ஒரு கட்சி உங்களை ஒட்டுமொத்தமாக வைகோவை எப்படி கூடஇருந்தே கட்சியை க்ளோஸ் செய்தார்களோ அதேபோல விசிகவை க்ளோஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.