பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் உண்ணாவிரதம் என மூன்று கட்டப் போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ.

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சிவகங்கை மாவட்ட கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இணை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் முன்னிலை வகிக்க கூட்டத்திலோ, " தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கையை ரத்து செய்தல், தொடக்கக்கல்வியை அழித்தொழிக்கின்ற அரசாணைகள் 145, 101 மற்றும் 102னை உடனடியாக ரத்து செய்திட வேண்டுதல், ஜாக்டோ ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை நடவடிக்கைகளையும் இரத்து செய்திட வேண்டுதல், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டத்தினை நடத்துவதாக சென்னையில் கூடடிய மாநில ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

அந்த முடிவின் படி செப்டம்பர் 6ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், 13ம் தேதி சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இதற்கான திட்டமிடல் கூட்டத்தை கல்வி மாவட்ட அளவில் செப்டம்பர் 8 அன்று நடத்துவது, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தினால் செப் 24ம் தேதி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு பல ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி உண்ணாவிரதம் நடத்துவது அதற்கான திட்டமிடல் கூட்டம் செப் 18ம் தேதி நடத்துவது." என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.