
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை என கூறி பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, 'இன்று காலை தான் அதிமுக கொறடா வந்து இந்த தீர்மானத்தை கொடுத்துள்ளார். எனவே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது' என தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் அமலில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பேரவை தலைவர் அவர்களே உங்களிடம் அனுமதி பெற்றுதான் பேச வேண்டும் என்பது தான் மரபு. அவை முன்னவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார். நேரமில்லா நேர விவாதத்தில் எழுப்பும் பிரச்சனையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி மக்களை பீதியில் வைக்க இரவு பகலாக துபாம் போடுகிறது எதிர்க்கட்சி. தமிழ்நாடு அரசுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்திவிட முடியுமா என துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் நடைபெற்றது என அனைவருக்கும் தெரியும். அது போன்று எந்த கலவரமும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்கள் எண்ணிக்கை இந்த ஆட்சியில் குறைந்து வருகிறது.
குற்றத்தில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்குகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மீது வழக்கு போடப்படுகிறது. கைது செய்யப்படுகிறார், தண்டிக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து மக்களை காவல்துறையும், அரசும் பாதுகாத்து வருகிறது. சில தொடர் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மக்களை திசைத் திருப்ப முயல்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் அவர் கூட்டணி வைக்கத் துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன் வாருங்கள்'' என்றார்.