
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (28/03/2025) அதிமுக கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறி பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மதுரை உசிலம்பட்டியில் காவலர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, 'இன்று காலை தான் அதிமுக கொறடா வந்து இந்த தீர்மானத்தை கொடுத்துள்ளார். எனவே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது' என தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் அமலில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பேரவை தலைவர் அவர்களே உங்களிடம் அனுமதி பெற்றுதான் பேச வேண்டும் என்பது தான் மரபு. அவை முன்னவரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார். நேரமில்லா நேர விவாதத்தில் எழுப்பும் பிரச்சனையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி மக்களை பீதியில் வைக்க இரவு பகலாக துபாம் போடுகிறது எதிர்க்கட்சி. சில தொடர் சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மக்களை திசைத் திருப்ப முயல்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன் வாருங்கள்'' என்றார்.

தொடர்ந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக சார்பாக இன்றைய தினம் நாட்டில் நடந்த பிரச்சனை குறித்து பேச முற்பட்டோம். அதற்கு அனுமதி கொடுக்க மறுத்து வெளியேற்றி இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் முத்துக்குமார். இவரையும் இவரது நண்பர் ராஜாராமையும் கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் மீது கல்லை தூக்கி போட்டதாகவும், இதில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். அவருடைய நண்பர் ராஜாராம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்துவிட்டு ஓடிய கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் தற்போது தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நிலையில் இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழக முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் சுதந்திரமாக கஞ்சாவை மற்றும் போதைப் பொருட்களை விற்று வருவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. இந்த தகவலை காவல் துறையிடம் தெரிவிப்பவர்களுக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் காவலரே தாக்கி கொலை செய்யும் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரிகள் துணிவு பெற்றுள்ளனர். கடந்த காலத்தில் காவல்துறை தலைவர் ஒருவர் இருந்தார். அவர் கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்காக ஆபரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 என்று 'ஓ' போட்டுவிட்டு ஓய்வுபெற்று விட்டார். காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி காவல்துறையினர் காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தை வைக்க இருந்தோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை'' என்றார்.