![Ethanol lorry overturned accident; Prohibition of cell phone use!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zJXv1MNlLzSchaj4tW7fA08rjo67MHa8S2lmVW_1Wf0/1675945051/sites/default/files/inline-images/n223284.jpg)
நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் அருகே எத்தனால் ஏற்றிக் கொண்டு வந்த டேங்க் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து எளிதில் தீப்பற்றக் கூடிய சுமார் 40,000 லிட்டர் அளவிலான எத்தனால் எரிபொருள் லாரி மூலம் கோவை மாவட்டம் திருப்பூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டேங்கர் லாரியானது சாலையோரம் கவிழ்ந்து விழுந்தது. உடனடியாக சங்ககிரியை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடியாக கவிழ்ந்துள்ள லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அந்த பகுதியில் மக்கள் யாரும் செல்போனை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மூலப்பொருளான எத்தனால் காற்றில் பரவுவதால் அந்த பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. கோவையிலிருந்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தீப்பொறி ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து நேரிடும் என்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.