“சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய இன்றைய உண்மை நிலையையும், நிறுவனங்கள் படுகின்ற சிரமத்தையும் புரிந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய ஒருநாள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அமைச்சர்களைப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அமைச்சர்களும் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலையை முதலமைச்சருக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கோரிக்கையாக அரசு பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு மின் நுகர்வோர் சங்கங்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மின்சார துறைக்கு அதைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பெயரில் இன்றைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள கோரிக்கையையும் கனிவோடு பரிசீலித்து விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.