ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சித்தூர் அருகே உள்ள சாலை போக்குவரத்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கே துணை ராணுவப்படை மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் வட்டாட்சியர் சென்றுவந்ததும், அதனை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு இல்லை என்று திமுக உட்பட பல்வேறு கட்சியினர் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் முறையிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கதிரவன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்றார்.
இதன் பின்னர், திடீரென நேற்று மாலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி அறைக்கு சென்று நேரில் பார்வையிட்டார். அந்த அறையில் சீல் வைக்கப் பட்டிருப்பதை உறுதி செய்தார். மேலும், போலீசார் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றும் அரசு அலுவலர்கள் அந்த பகுதியில் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.